அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ஒரு வாரமாக நடந்தது*
இந்த முறை, மாணவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு, ஆசிரியர்களின் தேவையை அறிந்து கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டது
இதற்காக, கல்வி மேலாண்மை தகவல் தொழில்நுட்ப திட்டமான, 'எமிஸ்' வாயிலாக, ஆதார் விபரங்களுடன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை; 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், 5.64 லட்சம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 16 ஆயிரத்து, 114 ஆசிரியர்களே தேவை. ஆனால், 33 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
அதனால், கூடுதலாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களின் விபரங்கள், மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டன. அவர்கள் அனைவரையும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க, பணி நிரவல் கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது. ஆனால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, போதுமான அளவுக்கு பள்ளிகளில் காலியிடங்கள் இல்லை*
இதனால், காலை, 9:00க்கு வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள், இரவு, 10:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் காத்திருந்தனர். மாநிலம் முழுவதும், 2,500 காலியிடங்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, நள்ளிரவில், உபரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.அதிலும், 2,500 ஆசிரியர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட்டது*
மீதமுள்ள, 14 ஆயிரத்து, 500 ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் வழங்க முடியாததால், தற்போது அவரவர் பணியாற்றும் பள்ளிகளிலேயே, பணியை தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.'இந்த சிக்கலுக்கு தீர்வு காண, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்