தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வுகளை நடத்துவதன் மூலம் பினாமி அரசு புதிய கல்விப் புரட்சி படைக்கிறது.
மாணவர்களின் கல்வித்தேவையை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளாவது மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தால் தான் தரம் உயர்த்தப்பட்டது அர்த்தமுள்ளதாக அமையும். ஆனால், அரசு உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப் படுவதாக பேரவையில் அறிவித்து விட்டு, அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது தான் அவர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். அவ்வாறு 2016-17 ஆம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 809 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாததால் அங்கு கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால், தற்காலிக ஏற்பாடாக பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இப்போது கூட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 1474 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை மாதம் ரூ.7,500 என்ற ஊதியத்தில் தற்காலிகமாக நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், இதில் கூட கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் கணினி அறிவியல் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு தலைமுறை கணினி அறிவியல் பாடத்தில் அரையாண்டுத் தேர்வு எழுதப் போகிறது. இன்னும் சில மாதங்களில் இவர்கள் ஆண்டு பொதுத்தேர்வையும் எழுதுவர்.
கணினி அறிவியல் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் அப்பாடத்தின் தேர்வை எழுதும் மாணவனால் எதை சாதிக்க முடியும்? அம்மாணவன் எவ்வாறு தேர்ச்சி பெற்று உயர்கல்விக் கற்கச் செல்வான்? ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவை கல்வி ஆகும். அதனால், மாநிலத்தை முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கும் அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனால், கல்வி குறித்தோ, மாநிலத்தின் வளர்ச்சி குறித்தோ எந்த தொலைநோக்குப் பார்வையும் பினாமி அரசுக்கு இல்லாததால் தான் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படாமல் கல்வித்துறை சீரழிகிறது.
கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் 4206 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 2873 தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு வகுப்புக்கும் 2 அல்லது 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் உள்ளனர். அங்கு பயிலும் மாணவர்களுக்கு கணினிப் பாடம் கற்பிக்கப்படுகிறது. அவர்களுடன் கணினி பாடமே நடத்தப்படாத மாணவர்களை 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் போட்டியிட வைப்பது எந்த வகையில் சமத்துவமாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்?
அரசு மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை முதுகலைப் பட்டதாரி கணினி ஆசிரியர்கள் நியமனம் இன்று வரை முறைப்படுத்தப்படவில்லை. மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் பணிகளில் காலியிடங்கள் ஏற்பட்டால் அது அடுத்து வரும் ஆசிரியர் தேர்வில் நிரப்பப்படும். ஆனால், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படுவதில்லை. தமிழகத்தில் முதன்முதலில் 1999-2000 ஆவது ஆண்டில் 1197 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1880 கணினி ஆசிரியர்கள் மாதம் ரூ.4000 ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் 1348 பேர் 2010-ஆம் ஆண்டில் சிறப்புப் போட்டித் தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்யப்பட்டனர். மீதமுள்ள 652 பணி நீக்கப்பட்ட போதிலும், உச்சநீதிமன்ற ஆணைப்படி அவர்களுக்கும் 2016&ஆம் ஆண்டில் பணி நிலைப்பு வழங்கப்பட்டது. இவர்களைத் தவிர வேறு கணினி ஆசிரியர்கள் எவரும் இன்று வரை முறைப்படுத்தப்பட்ட வகையில் நியமிக்கப்படவில்லை.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 748 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போதிலும், அது இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நலன் கருதியும், மாணவர்கள் நலன் கருதியும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 809 கணினி ஆசிரியர் பணியிடங்களை முதலில் தற்காலிகமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடிவதற்குள் நிரந்தரமாகவும் அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாணவர்கள் கல்வி நலன் சார்ந்த கோரிக்கையை அறிக்கையாக வெளியிட்ட அன்புமணி அய்யா அவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
திரு வெ.குமரேசன்,
பொதுச்செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்®655/2014.