|
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
அவரது பதினாறு வயது மகன் இந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்திருக்கிறான். அரசுப் பள்ளி மாணவன். இப்போது கோடை விடுமுறை தொடங்கியிருக்கிறது, கடந்த மூன்று நான்கு வாரங்களாக இரண்டு வாரங்களாக நீடித்துவந்த பதற்றத்திலிருந்து விடுபட்டிருக்கும் அந்த மாணவனுக்கு இப்போது கிரிக்கெட் விளையாட நேரம் கிடைத்திருக்கிறது, நண்பர்களைச் சந்திப்பதற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் நீடித்துவந்த தடை நீங்கியிருக்கிறது, தேநீர்க் கடை வைத்திருப்பவர்களான அவனது பெற்றோர் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவற்றுக்கெல்லாம் தடைவிதித்திருந்தார்கள். கேபிள் இணைப்பைத் துண்டித்திருந்தார்கள், தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் பிழைப்பைக் கெடுத்துக்கொண்டு அவனைத் தம் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். வரவிருக்கும் தேர்வு முடிவுதான் அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அவன் தங்களைப் போல் டீக்கடை வைத்துப் பிழைக்காமல் நல்ல விதமாக வாழ வேண்டும், அவனை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவர்களது கனவு. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் எட்டாம் வகுப்பைக் கடந்தபோது தோன்றிய கனவு அது. அப்போதுதான் அவர்கள் தங்கள் மகனின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார்கள்.
யோசிப்பதற்கு அவர்களிடம் அதிகம் ஒன்றுமில்லை. ஏறத்தாழப் பதினெட்டு வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்திருந்த அந்தத் தந்தை வாழ்வாதாரத்திற்காகத் தான் வசித்துவரும் அந்தச் சிறிய நகரத்தில் டீக்கடை ஒன்றைத் தொடங்கியபோது வாழ்க்கை அவ்வளவு சவாலானதாகத் தென்படவில்லை. எட்டாம் வகுப்புப் படித்த தன் உறவுக்காரப் பெண் ஒருத்தியை எளிய முறையில் கல்யாணம் செய்துகொள்ளவும் ஒரு படுக்கையறையும் சமையல்கட்டும் சிறு ஆசாரமும் கொண்ட ஓட்டு வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து அதில் குடியேறவும் இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கவும் அந்த தேநீர்க் கடை வருவாய் போதுமானதாக இருந்தது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பெரிய கவலைகள் எதுவும் அப்போது அவருக்கு உருவாகியிருக்கவில்லை. ஆனால் கடந்த பதினாந்தாண்டுகளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உருவான தனியார் பள்ளிகள் கல்வி குறித்து ஏற்படுத்திய கற்பனைகளும் கனவுகளும் பேராசைகளும் பதற்றங்களும் அவரைப் பீடிக்கத் தொடங்கின.
தன் குழந்தைகளை ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக்கிப் பார்க்க வேண்டுமென்ற கனவு அவரைப் பீடிக்கத் தொடங்கியதும் அவர் கவலைகளில் மூழ்கத் தொடங்கினார். அரசுப் பள்ளிகள் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவரைப் பதற்றமடையச் செய்தன. கூடவே நீட் தேர்வு பற்றிய அச்சங்கள்.
இப்போது அவர் வேறுவிதமாக யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். தனது மகனைத் தனியார் பள்ளியொன்றில் சேர்ப்பதற்கான முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுவிட்டால் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கும். கட்டணத்தைக் குறைத்துக்கொண்டுவிடுவார்கள். விடுதிக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். விடுதிக் கட்டணம் ஐம்பதாயிரத்திலிருந்து எழுபத்தைந்தாயிரம் வரை, மற்ற செலவுகளைக் கணக்கிட்டால் ஏறத்தாழ ஒரு லட்சம். பனிரெண்டாம் வகுப்பு முடிப்பதற்கு இரண்டு லட்சம் வரை தேவைப்படும். வீட்டிலிருந்து பள்ளிக்கு வருவதாக இருந்தால் வேன், பஸ் கட்டணம் செலுத்த வேண்டும். கணக்குப் போட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகவே இருக்கும். தேநீர்க் கடை நடத்தும் அவருக்கு அது பெரிய தொகை. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வின் தேவைகளைக் குறைத்துக்கொள்ள நேரிடும்.
அதனால் என்ன, மகன் தரமான கல்வியைப் பெறுவதற்கு அந்தச் சுமையை ஏற்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவனால் நீட் தேர்வில் பங்கேற்று மருத்துவப்படிப்புக்குப் போக முடியாது. மருத்துவம், பொறியியல், மென்பொருள் சார்ந்த துறைகளில் வேலைக்குச் சேர வேண்டுமானால் பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு அவசியம். தனியார் பள்ளிகள் வழியாகவே ஆங்கில அறிவைப் பெற முடியும். ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுதத் தெரியாவிட்டால் வாழ்க்கை அவ்வளவுதான். சிபிஎஸ்சி பள்ளி என்றால் தரமான கல்விக்கு நூறு சதவீத உத்தரவாதமுண்டு.
கற்பிதங்களும் கனவுகளும்
இதுபோன்ற கற்பனைகள் கீழ் மத்திய தர வர்க்கக் குடும்பங்களில் அவற்றின் உயிராகக் குடியேறியிருக்கின்றன. எந்த ஆதாரமுமில்லாமல் பரப்பப்பட்டிருக்கும் இந்தக் கற்பனைகளுக்குத் தமிழகத்தின் கீழ் மத்தியத்தர வர்க்கக் குடும்பங்களில் பல தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுத்திருக்கின்றன. எல்கேஜி படிக்கத் தொடங்கும்போதே குழந்தைகளின் மீது இந்தக் கனவு திணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சிறைக்கூடங்களாகிவிட்ட பள்ளிகளிலிருந்து வீடு திரும்பும்போது பெற்றோர்கள் பிரம்புகளுடன் காத்திருக்கிறார்கள். கொஞ்சம் காபி, ஹார்லிக்ஸ், அல்லது ஜுஸ், பிஸ்கட் அல்லது ஏதாவதொரு கேக் சாப்பிட்டுவிட்டு அவர்கள் ஹோம் வொர்க்கைப் பார்க்க வேண்டும். தாய் அல்லது தந்தையின் மேற்பார்வையில் கண்கள் செருகும்வரை புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும். விளையாடுவதற்கோ தாத்தா பாட்டிகளின் மடியில் உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டு கிடக்கவோ இப்போது அனுமதியில்லை. பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நீட் முதலான தகுதித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக அவர்கள் தங்கள் விளையாட்டுக்களையும் பொழுதுபோக்குகளையும் குழந்தைமையையும் இழக்க வேண்டும்.
கல்வியில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் நிலவிவரும் ஏற்றத்தாழ்வைக் கற்பனையான முறையில் கடந்து செல்வதற்கு முற்பட்டிருக்கும் மத்திய தர வர்க்க, கீழ் மத்திய தர வர்க்கக் குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மன அழுத்தம் குடும்ப அமைப்பையே சீர்குலைக்கும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. குடும்பம் இப்போது பேராசைகளால் சூழப்பட்ட ஒன்றாக, சுயநலத்தால் பீடிக்கப்பட்ட அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது.
இந்தியக் குழந்தைகளைப் போல பதற்றத்திற்கான குழந்தைகள் உலகில் வேறு எங்குமே இல்லை என இதுபற்றி கல்வியாளர் வசந்திதேவி சொன்னது நினைவுக்கு வருகிறது. கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்னும் கல்வியாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. கல்வியாளர்களின் வற்புறுத்தலை ஏற்று சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்போதிலும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தந்திரமான முறையில் ஏற்றத்தாழ்வைத் திணித்துக்கொண்டிருக்கிறன. பல தனியார் பள்ளிகள் தமக்கான நிழல் பாடத்திட்டங்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பெயரளவுக்குக்கூட நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இருபதாண்டுகளுக்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் தன் நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
அரசு, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கும் தொடக்கக் கல்வி முறையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் குறிப்பிட்டுச் சொல்லும்படி மேம்படவில்லை. இதன் காரணமாக அரசு, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மீதான மக்களின் நம்பிக்கை வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இது விரைவிலேயே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் இருப்புக்குச் சவாலாக உருவாகும்.
நீட் தந்த நிர்ப்பந்தம்
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு அரசு அவசரஅவசரமாக விழித்துக்கொண்டிருக்கிறது. பாடத்திட்டத்தை மாற்றுவதற்கும் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதற்கும் தமிழகக் கல்வித்துறை பல அதிரடி முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. நீட் முதலான எல்லாவிதமான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு மாணவர்களைத் தயார்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு கல்வித்துறை எடுத்திருக்கும் சில முடிவுகள் மாணவர்களின் பதற்றத்தை அதிகரிக்கும் நடைமுறைகளாகவே மாறிக்கொண்டிருக்கின்றன.
பத்து, பன்னிரெண்ணடாம் வகுப்புத் தேர்வுகளைப் போலவே பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வுகளும் பொதுத்தேர்வுகளாக மாற்றப்பட்டிருப்பது ஒரு உதாரணம். இது உண்மையில் தனியார் பள்ளிகளின் தந்திரங்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. பல தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்புப் பாடங்களின் மீது தேவையான அக்கறை செலுத்தாமல் நேரடியாகப் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பாடங்களில் கவனத்தைக் குவித்துத் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திக்காட்டுவததில் வெற்றி பெற்றுவந்தன. கல்வித் துறையின் தற்போதைய நடவடிக்கை அதற்குத் தடையாக இருக்கும். அதைவிட முக்கியமானது தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
இந்த ஆண்டு நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் பல பாடங்களின் கேள்வித்தாள்கள் கடினமானவையாக இருந்ததாகத் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேள்விகளைத் தவிர அவற்றில் இடம்பெற்றிராத கேள்விகள் பலவும் இடம் பெற்றிருந்தன. மாணவர்களின் பொது அறிவைச் சோதிக்கும் கேள்விகள் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலான கேள்விகள் பாடப்புத்தகங்களின் உள் பகுதிகளிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
உண்மையில் இந்தக் குற்றச்சாட்டு மனப்பாடக் கல்வியின் மீதான குற்றச்சாட்டு. அது மாற்றப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பதற்றமடைந்திருக்கும் கல்வித் துறை ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறது. ஒன்பதாண்டுகளாக ஒரே விதமான மனப்பாடக் கல்விக்குப் பழக்கப்படுத்தப்பட்டு வந்த மாணவர்களை சிபிஎஸ்சிக்கு நிகரான கல்விமுறைக்கு மாற்ற முனைந்திருக்கும் கல்வித் துறையின் பேராசையின் விளைவே இது.
கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் பொதுப்பள்ளி முறை போன்ற கல்வியில் சமத்துவத்துவத்தை உருவாக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுச் சில பத்தாண்டுகளாகவே கல்விக் கொள்ளையில் மூழ்கித் திளைத்திருக்கும் தனியார் பள்ளிகளுடன், அடைப்படையான கட்டமைப்பு வசதிகள்கூடப் பூர்த்திசெய்யப்படாத அரசுப் பள்ளி மாணவர்களை சமமற்ற போட்டி ஒன்றுக்குள் திணிக்கும் முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் தமிழகக் கல்வித் துறை தனியார் கல்வி நிறுவனங்களின் அடையாளங்களை அரசுப் பள்ளி மாணவர்களின் மீது திணிக்க முயன்றுவருகிறது.
இந்த முயற்சி மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு தனியார் பள்ளிகளின் பெருக்கத்திற்கே வழி வகுக்கும்.
கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் இதுபற்றிய விவாதங்களை முன்னெடுப்பதும் அரசின் கல்விக் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தனியார் பள்ளிகளின் கல்விச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிப்பதும் உடனடித் தேவையாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.