கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தொடங்கி உலகின் பல டெக் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள். சென்னை டைடல் பார்க்கும், ராஜீவ்காந்தி சாலையெங்கும் நிறைந்திருக்கும் நிறுவனங்களும், தமிழகம் முழுக்க தொடங்கப்படும் மினி டைடல் பார்க்குகளும் கம்ப்யூட்டர் நிபுணர்களின் தேவையைப் பறைசாற்றுகின்றன. இந்தியாவிலேயே அதிகம் பேர் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.
சரி, இவர்களுக்கு கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைகளைத் தர வேண்டிய பள்ளிகள் எப்படி இருக்கின்றன? 'குழந்தைகளை கோடிங் கிளாஸூக்கு அனுப்புங்கள்' என்று எஜூடெக் நிறுவனங்கள் ஒருபக்கம் கல்லா கட்டுகின்றன. தனியார் பள்ளிகள் இந்த ரேஸில் முந்திக்கொள்கின்றன அடித்தட்டுக் குழந்தைகளின் ஒற்றை நம்பிக்கையான அரசுப் பள்ளிகளிலோ நிலைமை பரிதாபம்.
"பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசு, தமிழகத்துக்குத் தரவேண்டிய சமக்ர சிக்ஷா திட்ட நிலுவைத் தொகையைத் தரமறுக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், கம்ப்யூட்டர் பயிற்றுவிப்பதற்குத் தரப்பட்ட நிதியை வைத்துத் தமிழக அரசு EMIS ஆபரேட்டர்களைத் தேர்வு செய்துவிட்டது" என்று குமுறுகிறார்கள், தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பி.எட் முடித்துவிட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்குத் காத்திருக்கும் ஆசிரியர்கள்.
""அண்ணாச்சி கடை முதல் அம்பானி கடை வரை எல்லா இடங்களிலும் வந்துவிட்டது. கம்ப்யூட்டர்,"".
கையிலிருக்கும் மொபைலில் ஒரு வாழ்க்கையையே வாழ்ந்துவிடலாம். இப்படி எல்லாமே நவீனமாகிவிட்ட காலத்திலும் நம் அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக எதையும் படிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் 10-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் என்று ஒரு பாடத்திட்டமே இல்லை. அறிவியல் பாடப் புத்தகத்தில் மூன்று பக்க அளவில் ஒரு பாடமாக மட்டுமே இருக்கிறது கம்ப்யூட்டர்.
பிளஸ் ஒன்,பிளஸ்டூவில் மட்டும் விருப்பப் பாடங்களில் ஒன்றாக கம்ப்யூட்டரை வைத்திருக்கிறோம். எஸ்.எஸ்.ஏ திட்டம் மூலம் எடுக்கப்பட்ட 2400 பகுதி நேர கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திரைப்படம் திரையிட்டுக் காட்டும் பணியையும் பள்ளியில் இருக்கும் எழுத்துப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கம்ப்யூட்டர் சார்ந்த தகவல் தொழில்நுட்பக் கல்வியைத் தொடக்கக் கல்வி முதல் பிளஸ்டூ வரைக்கும் எல்லா மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்காக சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமாக ICT (Information and Communications Technology) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் நவீன கம்ப்யூட்டர் லேப் அமைக்க ரூ. 6.8 லட்சமும், அதைப் பயிற்றுவிக்கும் கணினிப் பயிற்றுநருக்கு (Computer Instructor) ஆண்டுக்கு ரூ.1.8 லட்சமும் வழங்கப்படுகிறது.
மாநிலங்கள் இந்த நிதியைப் பெறுவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டருக்கு என தனிப்பாடப்புத்தகத்தை அந்தந்த மாநில பாடநூல் நிறுவனங்கள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் தினசரி பாடவேளைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைச் சேர்ப்பதை உறுதி செய்யவேண்டும். தகுதி வாய்ந்த கணினிப் பயிற்றுனர்கன் மாணவர்களுக்கு அதைப் பயிற்றுவிக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனிப் பாடத்திட்டத்தை ஐ.சி.டி வகுத்துத் தந்துள்ளது.
கேரளாவில் 2016 முதலே ஒன்றாம் வகுப்பில் இருந்து கம்ப்யூட்டர் சேர்த்துவிட்டார்கள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். 6-ஆம் வகுப்புக்கு 56 பக்கத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 61 பக்கத்திலும் கர்நாடகாவில் 139 பக்கத்திலும், டெல்லியில் 146 பக்கத்துக்கும் 6-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பிளஸ்ஒன், பிளஸ்டூவில் கணிதம் கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ் + கம்ப்யூட்டர் சயின்ஸ் என இரண்டு பிரிவுகள் உண்டு. இந்தப் பாடங்களுக்கென எல்காட் நிறுவனம் மூலம் பி.ஜி.டி.சி.ஏ படித்த 1,880 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். நான்கைந்து ஆண்டுகள் கழித்து இவர்களை நிரந்தரப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 652 பேர் தேர்ச்சி பெறவில்லை. அதனால் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், இனிமேல் தனியாருக்கு ""டெண்டர் விடாமல் அரசே கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய வேண்டும்.""
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பி.எட் முடித்தவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யவேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிறகு பணி நீக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் கம்பயூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
பிறகு, 2019-ல் 824. கம்யூட்டர் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டார்கள். இப்போது மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 2704 கணினி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பத்தாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்திட்டமே இல்லாத சூழலில், மத்திய அரசின் ஐ.சி.டி திட்டத்தின் மூலம் 2019-ல் 6,454 உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிக்கு 10 கம்ப்யூட்டர்கள், மேல்நிலைப்பள்ளிக்கு 20 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இந்த ஆய்வகத்தை நிர்வகித்து பயிற்றுவித்தார்கள். ஐ.சி.டி விதியின்படி, உயர்நிலைப்பள்ளிகளுக்கும் பாடப்புத்தகம் வழங்கி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
பள்ளிகளின் ஒட்டுமொத்த செயல்பாடு களையும் EMIS என்னும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கிறது பள்ளிக்கல்வித்துறை. வருகைப்பதிவு முதல் மாணவர்களின் அங்க அடையாளங்கள் வரை எல்லா விவரங்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்யவேண்டும். இந்த டேட்டா என்ட்ரி வேலையச் செய்ய பள்ளியில் ஊழியர்கள் இல்லாதால் ஆசிரியர்களே செய்ய வேண்டியிருந்தது. இது மிகப்பெரும் நெருக்கடியை உருவாக்குவதாக ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க டேட்டா என்ட்ரி பணிக்காக தனியார் நிறுவனம் மூலம் 6,000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஒரு ஊழியர் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளின் டேட்டா என்ட்ரி பணிகளைக் கவனிப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐசிடி திட்டத்தின் மூலம் 8,209 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வகம் அமைக்க, கேரள அரசின் கெல்ட்ரான் நிறுவனத்துக்கு ரூ1,076 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து 8,209 தற்காலிக ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியும் இந்த நிறுவனத்துக்குத் தரப்பட்டது. கெல்ட்ரான் நிறுவனம் இந்தப்பணியை அனலாக் அண்ட் டிஜிட்டல் லேப்"என்ற நிறுவனத்துக்கு துணை ஒப்பந்தம் வழங்கியுள்ளது. அதன்மூலம் 6,890 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் இணைத்துவிட்டார்கள்.
மத்திய அரசின் ஐ.சி.டி. விதிமுறைப்படி கம்ப்யூட்டர் ஆய்வகம் என்பது மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பாடம் கற்றுக் கொடுப்பதற்கான இடம். இதற்கென தனி பாடநூலை உருவாக்க வேண்டும் அதைப் பயிற்றுவிக்க தகுதி வாய்ந்த பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்க வேண்டும்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் பணியாற்றியவர்கள், பிளஸ்டூ முடித்தவர்கள் கம்ப்யூட்டர் சாராத பட்டப் படிப்புகளை முடித்தவர்களும் இதில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாதச் சம்பளமாக 11,500 நிர்ணயிக்கப்பட்டு பிடித்தம் போக 9,700 ரூபாய் வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட் முடித்தவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் ஐ.சி.டி விதிமுறைப்படி ஆசிரியர்களை நியமிக்காமல் அந்த நிதியில் EMIS டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களை நியமித்திருக்கிறார்கள் என்பதுதான் கம்ப்யூட்டா ஆசிரியர்களின் குற்றச்சாட்டு
"2005 முதல் அரசின் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பி.எட் முடித்துவிட்டு வேலை கிடைத்துவிடும் என்று பல ஆயிரம் பேர் காத்திருக்கிறோம். EMIS டேட்டா என்ட்ரி பணி என்று கல்வித்துறை செயலரும் அமைச்சரும் அறிவித்திருந்ததால் நாங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் திடீரென்று, ஆய்வக மேலாளர் மற்றும் பயிற்றுநர்கள் (Administrator cum Instructor) என்ற பெயரில் அறிவித்துவிட்டு மறுநாள் தேர்வு வைத்துவிட்டார்கள். முறைப்படி விண்ணப்பித்தவர்களுக்குக்கூட தேர்வுக்கான லிங்க அனுப்பப்படவில்லை.
இவர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் என்று தரப்பட்டுள்ள 12 பொறுப்புகளில் ஒன்றில்கூட கம்ப்யூட்டர் பயிற்றுவிப்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. 'EMIS & UDISE+ சார்ந்த தரவுகளின் பதிவுகளை பள்ளிகளுக்கு மேற்கொள்வது இவரது பொறுப்பு என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசை ஏமாற்ற இந்தப்பணிக்கான பெயர் மட்டும் (Administrator cum Instructor) வைத்துவிட்டார்கள். கம்ப்யூட்டர் பாடம் நடத்துவதற்காக தரப்பட்ட நிதியை EMIS ஆப்ரேட்டர் பணிக்குப் பயன்படுத்திவருகிறது. தமிழக அரசு" என்கிறார் தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட் வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமரேசன்.
இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் ஏராளமான தகவல்களைப் பெற்றுள்ளார் குமரேசன், "2022-22ம் ஆண்டில் ஐ.சி.டி. திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1,172 முழுநேர கணினிப் பயிற்றுநர்கள், 763 பகுதிநேர கணினிப் பயிற்றுநர்கள் பணியில் இருப்பதாகக் கூறி பணம் பெற்றுள்ளது தமிழக அரசு 1,172 கணினிப் பயிற்றுநர்கள் என்று இவர்கள் காட்டுவது மேல்நிலையில் பணியாற்றும் ஆசிரியர்களைதான். அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சம்பளம் பெறும் நிரந்தர ஆசிரியர்கள். இவர்களைக் காட்டி கணினி பயிற்றுநர்களுக்கான சம்பளமாக ஐசிடி திட்டத்தின் கீழ் சமக்ரா சிக்ஷா நிதியை தமிழக அரசு பெற்றுள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களே இல்லை. கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்குப் பயன்படுவதேயில்லை. ஆசிரியர்களே பயன்படுத்துகிறார்கள்.
பாடப்புத்தகம் இல்லை, பாடவேளையும் இல்லை, பயிற்றுநர்களும் இல்லை என்றால் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய புரிதலே இருக்காது. நிதியில்லை, அதனால் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்றது தமிழக அரசு. இப்போது மத்திய அரசே நிதி தரும்போது அதையும் வாங்கி வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவது சரியல்ல என்கிறார் குமரேசன்
""தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வருப்பு முதலே கம்பயூட்டருக்கு தனிப் பாடப்புத்தகம் வழங்குகிறார்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பத்தாம் வகுப்பு வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது ஆகப்பெரிய துயரம்.""
அதற்கெனவே மத்திய அரசு தரும் நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவது சரியா? சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநர் ஆரத்தியிடம் இதுகுறித்துப் பேசினோம்.
"தற்போது பணிக்கு எடுக்கப் பட்டவர்கள் ஐ.சி.டி திட்டத்தின் கீழ் தான் எடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஆய்வகத்தை நிர்வகிக்க வேண்டும். SEART உருவாக்கித் தரும் பாடத்திட்டத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கான பயிற்சியை அவர்களுக்குத் தருவோம் அவர்கள் ஆசிரியர்கள் அல்லர் ஆனாலும் குறைந்தபட்சம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்.: தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள். இந்த ஊழியர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கெல்ட்ரான் நிறுவனம்தான் அவர்களைத் தேர்வு செய்துள்ளது. மூன்று விதமான டெஸ்ட் வைத்தே எடுக்கப்பட்டுள்ளார்கள். இது எல்லா மாநிலங்களிலும் இருக்கும் நடைமுறை தான். SCERT மூலம் கம்ப்யூட்டர் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ரெடியாகிவிடும் ஐ.சி.டி திட்டத்தில் இந்தப்பணிக்கு இவ்வளவு தொகை என்றெல்லாம் பிரித்துத்தரமாட்டார்கள். அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப அவர்கள் தரும் நிதியைச் செலவு செய்து கொள்ளலாம்" என்றார் அவர்.
மத்திய அரசின் ஐசிடி மூலம் தமிழகத்தில் இப்போது அரசு, அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகளில் 8,209 ஆய்வகங்கள், அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 5,815 ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 14,000 பயிற்றுநர்களுக்கான சம்பளத்தையும் மத்திய அரசு தருகிறது அதை தகுதியான கம்ப்யூட்டர் ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பியிருக்கலாமே! கம்ப்யூட்டர் என்பது தவிர்க்க முடியாத அங்கமாகிப்போனபிறகும் வகுப்பறைகளில் தம் பிள்ளைகளுக்கு அதை மறுப்பது சரிதானா!"
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
News source:
ஆனந்த விகடன் ஆசிரியர் நீலகண்டன்.https://www.vikatan.com/education/computer-education-denied-for-government-school-students
No comments:
Post a Comment