![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
நெல்லை அருகே அரசு பள்ளி விஷமிகளின் கூடாரமாகிவிட்டது. இதனால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர். நம்ம நாட்டில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வார்கள். இதைத்தான் நாம் கேள்விபட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம் ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் விஷமிகள் அடிக்கடி புகுந்து பொருட்களை சூறையாடி செல்வதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துச்சென்று விடுகிறார்கள். இந்த பள்ளி பற்றிய அவல நிலைதான் கீழே தரப்பட்டுள்ளது.
நெல்லை அருகே சுத்தமல்லி போலீஸ் எல்கையில் உள்ளது நடுக்கல்லூர் கிராமம். இங்கு அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி என 3 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 1 முதல் 5ம் வகுப்புவரை உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிக்கிறார்கள். 6 முதல் 10ம் வகுப்புவரை மாணவர்களுக்கு தனி வகுப்பறையும் மாணவிகளுக்கு தனி வகுப்பறையும் உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு இருபாலரும் சேர்ந்து படிக்கிறார்கள்.
இதில் மேல் வகுப்புற்கு ஆண், தலைமை ஆசிரியரும், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கு பெண் தலைமை ஆசிரியர்களும் உள்ளனர். மொத்தம் 45 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவர் 2 அடி உயரம் மட்டுமே. இதனால் ஆடு, மாடுகள் மற்றும் விலங்குகள் எளிதாக சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து விடுகின்றன. மேலும் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில் இங்கு குடித்து கும்மாளமிடுவதாகவும் தெரிகிறது. இந்த பள்ளிக்கு வந்த சோதனை என்னவென்றால் கடந்த 6 மாதத்தில் 5 தடவை விஷமிகள் புகுந்து வகுப்பறை பூட்டுகளை உடைத்து அங்கிருக்கும் பொருட்களை சிதறடித்துவிட்டு செல்கிறார்கள். சில நேரங்களில் மட்டும் பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
இதனால் இங்கு வருபவர்கள் திருடும் நோக்கத்தில் வருபவர்கள் அல்ல என்பது உறுதியாக தெரிகிறது. விஷமிகள்தான் இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பல தடவை சுத்தமல்லி போலீசில் புகார் செய்தும் இதுவரை விஷமத்தில் ஈடுபடும் விஷமிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு கூட விஷமிகள் உள்ளே புகுந்து சில பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். இதுபோல் தண்ணீர் குழாய்களை அடிக்கடி சேதப்படுத்துவதும், மின் சப்ளையை துண்டிப்பதும் இவர்களின் வாடிக்கை.
இது போதாதென்று மாணவிகளுக்கு வழங்கப்படும் நாப்கின் பணம் உண்டியலில் போட்டு வைப்பது வழக்கம். அதையும் விட்டு வைப்பதில்லை. ஒரு தடவை ஆபீஸ் அறைக்குள் நுழைந்த விஷமிகள் விடைத்தாளை எரித்துள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது. விஷமிகளின் அட்டகாசத்திற்கு முடிவே இல்லையா? இதை செய்பவர்கள் மாணவர்களுக்கு தெரிந்தவர்களா என ஒரு முடிவுக்கு வர முடியாமல் பள்ளி நிர்வாகம் திணறுகிறது. இதற்கு முடிவு கட்ட சில வழிமுறைகளும் முன் வைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த பள்ளியின் காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கட்டவேண்டும். இரவு காவலாளி போடவேண்டும். சிசிடிவி கேமிரா பொருத்தவேண்டும்.
இந்த மூன்றும் இருந்தால் விஷமிகள் அடையாளம் தெரிந்து விடும். சிசிடிவி கேமிரா பொருத்த ரூ.80 ஆயிரம் ஆகும் என கொட்டேஷன் போட்டு பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது. ஆனால் இதுவரை கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கண்ட மூன்று திட்டங்களை செயல்படுத்தாதவரை இங்கு படிக்கும் மாணவர்கள் அச்சத்துடனும் ஆசிரியர்கள் கலக்கத்துடன்தான் பணியாற்றவேண்டிய சூழ்நிலை வரும்
No comments:
Post a Comment