வேலூர் மாவட்டத்தின் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாளை பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழுவினை மத்திய அரசு ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் கொடுத்த காலத்தைக் கடத்தி விட்டு, ஆறு மாத கால அவகாசம் கேட்பது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் கூட்டமைப்பினர். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காவேரி மேலாண்மையை உடனே அமைத்து தமிழகத்துக்கான நீதியை வழங்கவும் வலியுறுத்துகின்றனர்.
தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உடல்நலத்துக்கும் கேடுதருகின்ற, அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிற விதத்திலும் இயங்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு. இந்த இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி நாளை நடத்தவிருக்கும் பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தும் உள்ளது
இது குறித்து, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க வேலூர் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜேஸ் கண்ணாவிடம் பேசினோம். ``காவிரி நீர் என்பது நமது அடிப்படை உரிமை. ஆசிரியர்களாகிய நாங்கள் சமுதாயத்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள். அதனால், சமூகத்தின் தேவைகளைக் குறித்த அக்கறை எங்களுக்கும் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதமாகவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் நாளை மாலை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதில், அனைத்து சங்கங்களைச் சேர்ந்த, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
ஜாக்டோவின் செய்தித்தொடர்பாளர் ஆசிரியர் வா.ராமமூர்த்தி, ``ஈழப்பிரச்னை, பணம் மதிப்பிழப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகளின்போது நாங்கள் முன் வந்து போராட தயங்கியதே இல்லை. அதுபோலவே காவிரி மற்றும் ஸ்டெர்லைட் குறித்தும் களத்தில் நிற்கிறோம். காவிரி நீர் எங்களின் தாகத்தைத் தீர்த்து வருகிறது. அதன் நன்றி உணர்ச்சி எங்களுக்கு உண்டு. அதனால், மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக வேலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம்" என்றார்.
காவிரி நதியைப் பற்றி அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் பெரும் பொறுப்பும் கடமையும் கொண்ட ஆசிரியர்கள், களத்தில் இறங்கியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனும் எழும் கோரிக்கைக்கான குரல்கள் இன்னும் இன்னும் அதிகரிக்கட்டும்
No comments:
Post a Comment