 |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
குறைந்த மாணவர்கள் உள்ள வகுப்புகளை மூடுவது கல்வி வாய்ப்புகளை பாதிக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள மேல்நிலைப்பள்ளி வகுப்புகளை மூட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது ஊரக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் வகையிலான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக அரசு பள்ளிகள் இப்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்னை உட்கட்டமைப்பு பற்றாக்குறையும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமையும் தான். அதிலும் குறிப்பாக ஆசிரியர்களைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில் தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாக உள்ளது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வது; அதன்பிறகும் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியும். ஆனால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு பதிலாக மாணவர்களை இடமாற்றம் செய்து இந்த பிரச்னைக்கு குறுக்கு வழியில் தீர்வு காண்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முயல்வது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும்
15-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பரிந்துரைத்துள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆசிரியர் பணியிடங்களை உபரியாக்கி, அவர்களை அந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தி ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சிறப்பான திட்டமாகத் தோன்றினாலும் ஊரக மாணவர்களின் கல்வி வாய்ப்பை திட்டமிட்டு பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும், கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, கணினி அறிவியல் பிரிவு, வணிகவியல் பிரிவு, தொழில்பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளும் இருக்க வேண்டும். அதுதான் சமமான கல்வி வாய்ப்பு ஆகும். இதற்கு மாறான எந்த நடவடிக்கையும் கல்வி வாய்ப்பை பறிக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். உதாரணமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பிரிவில் 25 மாணவர்கள் மட்டுமே இருந்தால், அந்தப் பாடப்பிரிவு மூடப்பட்டு, அருகிலுள்ள பள்ளியில் அந்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டுமாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சராசரியாக 8 கிலோமீட்டருக்கு ஓர் அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளியில் போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்பதற்காக, இருக்கும் மாணவர்களை இன்னொரு பள்ளிக்கு மாற்றினால் அவர்கள் அதிகபட்சமாக தினமும் 16 கிலோ மீட்டர் பயணம் செய்து தான் படிக்க வேண்டும். போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் 16 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளி சென்று திரும்புவது எளிதான காரியமல்ல. இதன் காரணமாகவே பலர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடும் ஆபத்துகளும் உள்ளன.
No comments:
Post a Comment