சிபிஎஸ்இ வினாத் தாள் கசிவு : பள்ளி ஊழியர்கள் மூவர் கைது
சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தில்லி போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மூவர்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுக்கவினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில், ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியின் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹிமாசலப் பிரதேச மாநிலம், உனா மாவட்டத்தில் உள்ள டிஏவி பள்ளியின் ஆசிரியர் ராகேஷ், அப்பள்ளியின் எழுத்தர் அமித், அலுவலக உதவியாளர் அசோக் ஆகியோர் தில்லி குற்றப் பிரிவு போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். நீண்ட விசாரணைக்கு பிறகு மூவரும் கைது செய்யப்பட்டனர்.
வினாத்தாள் கசிந்தது எப்படி?
உனாவில் உள்ள ஜவஹர் நவோதயா பப்ளிக் பள்ளியில் தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டிருந்த ராகேஷ், மார்ச் 23-ஆம் தேதி கணினி அறிவியல் தேர்வுக்கான வினாத் தாள் கட்டுகளை உனாவில் உள்ள யூனியன் வங்கியின் பாதுகாப்பு அறையில் இருந்து பெற்றுள்ளார். அப்போது, மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் பொருளியல் பாடத்துக்கான வினாக் கட்டு ஒன்றையும் அவர் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. பின்னர், தனது கூட்டாளிகளான அமித், அசோக் மூலம் அந்த வினாத் தாளை செல்லிடப்பேசியில் படம் எடுத்து, வாட்ஸ்-அப் மூலம் கசியவிட்டது தெரியவந்துள்ளது. சண்டீகரில் உள்ள தனது உறவினருக்கும் ராகேஷ் அந்த வினாத் தாளின் கையெழுத்து பிரதியை அனுப்பிவைத்துள்ளார்.
தற்போது உனா நகரில் இருந்து தில்லிக்கு 3 பேரும் கொண்டு வரப்படுகின்றனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, சிபிஎஸ்இ அமைப்பால் 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கும், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்துக்கும் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், வாட்ஸ் அப் சமூகவலைதளம் மூலம் கசிய விடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, துறை ரீதியிலான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த மாதம் 30ஆம் தேதி அறிவித்தது. 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் திட்டமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
முன்னதாக, சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிய விடப்பட்ட விவகாரத்தில் தில்லியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment